வட மாகாணத்தின் விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04 மார்ச் 2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது. எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழி முறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் எனவும், விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாறவேண்டும் எனவும் தெரிவித்ததுடன் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
